உலகம் முழுவதும் மனித குலத்துக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக கொரோனா வைரஸ் நோய் உருவாகியுள்ளது. சீனாவில் கடந்த நவம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வெகு வேகமாக பரவி வருகிறது. தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் நோய் 72 லட்சத்திற்கு மேற்பட்டோரை பாதித்ததுடன் சுமார் 4.10 லட்சம் மக்களின் உயிரையும் பறித்துள்ளது. இந்தியாவில் 2.98 லட்சம் பாதிக்கப்பட்டு சர்வதேச அளவில் கொரோனா தொற்று அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா 4-ஆம் இடத்தில் உள்ளது. குறிப்பாக தமிழகம் 35 ஆயிரம் பாதிப்புகளுடன் இந்தியாவில் 2வது இடத்தில் இருக்கிறது.

உலகின் முன்னேறிய நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பு மருந்து கண்டறியும் ஆராய்ச்சியின் தொடக்க நிலையிலே உள்ளனர். இதனால் உலகின் பெரும்பாலான நாடுகளில் பொது முடக்கங்கள் அமல்படுத்தப்பட்டது. தற்போது நோயின் தாக்கம் சற்றே  கட்டுக்குள் வந்த நிலையில், பொது முடக்கங்களில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலை மாற தொடங்கியுள்ளது. இச்சமயத்தில் நோயின் தொற்று படாமல் இருக்க சமூக விலகல் முறை, கைகளை கிருமிநாசினி கொண்டு அடிக்கடி சுத்தப்படுத்துதல், முகக்கவசம், நோய்  எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் சத்தான உணவு பழக்கங்களை கடைப்பிடிப்பது அவசியமென்று வல்லுநர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கோவிட் – 19 வைரஸ் முதலில் காய்ச்சல் உருவாக்கி, அதன் பின் நிமோனியா வரும் அளவுக்கு ஆபத்தானது. இந்த வைரஸ் தொற்று மூலம் பரவுவதால், இதற்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.ஆண்டிபயாட்டிக்ஸ் மருந்துகள் பயன்படுத்தினாலும் அவை தற்காலிகத்திற்கே ஆகும். எனவே அனைவரும் தங்களது உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமே, நம்மை இந்த வைரஸ்ஸிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள கூடிய ஒரே வழியாகும்.

விளையாட்டு வீரர்கள் மீது தாக்கம் :

குறிப்பாக விளையாட்டு வீரர்களுக்கு நோய்  எதிர்ப்பு சக்தி என்பது மிக முக்கியமானதாகும். ஊட்டச் சத்து அதிகம் நிறைந்த உணவுகள் சாப்பிடுவது மூலமே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை சீராக வைத்திருக்க முடியும். குறிப்பாக இந்த லாக்டவுன் நேரத்தில் வீரர்கள் வீட்டிலே முடங்கி இருந்ததால் போதுமான உடற்பயிற்சியும் அன்றாட பயிற்சிகளும், டயட் பின்பற்றப்படாதலால், இனி லாக்டவுன் முடிந்து வீரர்கள் விளையாட்டு பயிற்சிகளுக்கு திரும்பும் வேளையில் நிறைய இன்னல்கள் சந்திக்க நேரிடலாம்.

வீரர்கள் அதி தீவிர பயிற்சிகள் செய்யும் பொழுது, போதுமான ஊட்டச்சத்து நிறைந்த டயட் பின்பற்றாதலால், மிக எளிதில் காயமடையவோ, சோர்வுக்கோ உள்ளாவர்.

முந்தைய நாட்களில் விளையாட்டு வீரர்கள் தாங்கள் செய்யும் உடற்பயிற்சியிலும், உண்ணும் உணவில் போதுமான விட்டமின், மினரல், கால்சியம், மெக்னீசியம் உள்ளனவா என்று விழிப்புணர்வுடன் இருப்பார்கள். அதற்க்கு ஏற்றதுபோல் உடற்பயிற்சி செய்ய, உடலை ஃபிட்டாக வைத்திருப்பார்கள். இதில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் அவர்களின் நோய்  எதிர்ப்பு சக்தி குறைந்து, அவர்களின் ஆட்டத்திறன் குறைந்து விடும்.

 

சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவு = உறுதியான நோய் எதிர்ப்பு சக்தி

அதி தீவிர பயிற்சி + குறைபாடான உணவு பழக்கங்கள் = வலுவற்ற நோய் எதிர்ப்பு சக்தி

 

நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்கப்படுத்த நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

  1. சரியான உடலுழைப்புக்கு தேவையான கலோரி நிறைந்த உணவுகள்
  2. புரோடீன் நிறைந்த தரமான உணவுகள்  
  3. உடல் செரிமானம் நன்றாக இருக்க விட்டமின் – டி நிறைந்த உணவுகள்
  4. தசை மற்றும் சருமம் நன்றாக இருக்க விட்டமின் சி  நிறைந்த உணவுகள்
  5. நரம்பு மற்றும் இரத்த அணுக்கள் செழிப்பாக இருக்க விட்டமின் பி12 கொண்ட உணவுகள்
  6. நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குப்படுத்த உதவும் விட்டமின் ஈ உணவுகள்
  7. எலும்பு மற்றும் தசை வலுவாக அமைய கால்சியம், மெக்னீசியம் நிறைந்த உணவுகள்
  8. உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் ஆண்டி ஆக்ஸிடன்ட  நிறைந்த பழம் மற்றும் காய்கறிகள்
  9. நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் மிளகு, இஞ்சி, பூண்டு மற்றும் மஞ்சளை தினம்தோறும் உண்ணும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

லாக்டவுன் முடிந்த பிறகு, தினசரி பயிற்சிக்கு திரும்பும் வீரர்கள் முதலில் இரத்த பரிசோதனை செய்து, இரத்தத்தில் இருக்கும் விட்டமின் மற்றும் மினரலின் அளவினை தெரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக தசையினில் வீக்கம் ஏற்படுத்தக்கூடிய  சி-ரியாக்டிவ் புரோட்டின், எரித்ரோசைட் செடிமென்டேஷன் வீதத்தினை தெரிந்துகொள்ள வேண்டும். ஏதேனும் குறைபாடு இருந்தால் பயிற்சியாளரையோ டயட்டீஷியனையோ அணுகவேண்டும். இரத்த பரிசோதனையின் அடிப்படையில் ஊக்கிகள் உடலுக்கு தகுந்தவாறு நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் விதமாக டயட் ஒன்றினை பின்பற்ற வேண்டும்.

புதிய டயட் முறை:

இந்த டயட்டில் நீங்கள் சாப்பிடும் சாம்பார், ரசம், சாதத்திலும் மஞ்சளை சேர்த்துக்கொள்ள வேண்டும். பொதுவாக வீரர்களுக்கு தேநீர் பரிந்துரைக்கப்படாத நிலையில், நோய் தொற்றின் காரணமாக இஞ்சி, மஞ்சள், ஏலக்காய், லவங்கம் அடங்கிய மசாலா தேநீர் அருந்துவது சிறந்தது. சர்க்கரையின் அளவை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டும்.

தினமும் கொய்யா, நெல்லிக்காய், ஆரஞ்சு, கிவி பழமாகவோ அல்லது சாறு பிழிந்தோ சாப்பிட வேண்டும். விட்டமின் குறைபாடுகளுக்கு எடுக்கும் சத்து மாத்திரை விட ஒரு நாளைக்கு 5 ஆரஞ்சுகள் சாப்பிடுவது பெரிதானது. தினமும் காலை 5 துளசி இலைகளை சாப்பிடுவது நல்லது. துளசியை தேநீரிலும் கலந்து குடிக்கலாம்.

பூண்டிற்கு நிறைய நன்மைகள் உண்டு. முந்தைய நாள் இரவு இரண்டு பூண்டு பற்களை தண்ணீரில் ஊறரவைத்து அடுத்தநாள் காலை அதை நசுக்கி சாப்பிட வேண்டும். இதை இவ்வாறு செய்யும் பொழுது, பூண்டில் இருக்கும் சக்திவாய்ந்த ஆல்லிஸின் எனப்படும் கிருமிநாசினி உடலில் இருக்கும் அனைத்து கிருமிகளையும் அழித்துவிடும். இதை தினமும் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ஆனால் குறைபாடு என்னவென்றால் வியர்வையில் துர்நாற்றம் வீசக்கூடும். ஆனால் நோய்வாய்ப்பட்ட வீரனை விட, உடலுழைப்பினால் துர்நாற்றம் வீசுவது கண்டுக்கொள்ளப்படாது.

மிளகு, பச்சைக் காய்கறிகளில் அதிகம் காணப்படும் லுடியோலின் எனப்படும் ஊட்டச்சத்தானது விளையாட்டு வீரர்களுக்கு உடற்பயிற்சியின் போது தேவைப்படும் உடல் வலிமையை தரக்கூடியது. நீண்ட ஓய்விற்கு பிறகு வீரர்கள் உடற்பயிற்சி செய்தால் தசைகள் மிக எளிதாக வீக்கம் அடைந்துவிடும். இதனை சரியான கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்ள ப்ரோக்கோலி, கீரை, மிளகு, ஓமம், சீமை சாமந்தி தேநீர் போன்ற உணவுகளை தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த கொரோனா வைரஸ் தொற்று மனிதர்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதார பழக்கவழக்கங்களில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தி ஒழுக்கமான வாழ்வுமுறையை வாழ கற்றுக்கொடுத்துள்ளது. எனவே நம்பிக்கையுடன் இருங்கள், உற்சாகமான மனம் மற்றும் துருத்துருவான இதயத் துடிப்பு உள்ளவர்கள் மிக குறைவாகவே நோய்க்கு ஆளாகிறார்கள் என்பதை ஆராய்ச்சிகள் கூறுகிறது.

Leave a Reply